திருவேட்டீஸ்வரர் திருக்கோயில் திருத்தல வரலாறு

திருக்கோயில் ஓர் அறிமுகம்

தொண்டை நாட்டில் திருவொற்றியூர், திருமயிலாப்பூர் என்னும் திவ்ய தலங்களுக்கு இடையில் உள்ளது திருவேட்டீசுவரன் பேட்டை. திருவேட்டுநகர், திரு வேட்டீசுரம் என்றும் போற்றப்படும் இத்தலத்தை `சிவ லோகத் தலம்’ என்று கூறுவர் பெரியோர். தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாய் `தெண்ணீர் புனற்கெடில வீரட்டமுந் சீர்காழி வல்லம் திருவேட்டியும்’ என்று திருநாவுக்கரசரால் காப்புத் திருத் தாண்டகத்தில் பாடப்பட்டுள்ளது. சுயம்பு மூர்த்தியாய் நின்று அருள்பாலிக்கும் திருவேட்டீசுவரரின் பெருமை சொல்லுதற்கு அரியது.

இப்பழம்பதி இடைக்காலத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் திருமயிலையில் வசித்த வேளாண்குடிமகனார் சமுத்திர முதலியாரால் திருப்பணி செய்யப்பட்டு, விரித்துக் கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது. இத்திருக்கோயிலில் வேறு எங்கும் காணப்படாத சந்தானகுரவர்கள்,  பிரம்மசூத்திர சிவாத்வைத பாஷ்யகாரரான நீலகண்ட சிவாச்சாரியார், தெய்வச் சேக்கிழார் ஆகியோரது விக்கிரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 1893ம் ஆண்டு திரு. சுப்ரமணிய முதலியார்  அவர்களின் முயற்சியினால் சமயாசாரியார்களின் பிரதிஷ்டையும், கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

வரலாற்றுச் செய்திகள்

மிகப்பழமையான இத்திருக்கோயில் 7-ம் நூற்றாண்டில் இருந்துள்ளது. இயற்கை அல்லது போரின் காரணமாக இக்கோயில் முற்றிலும் அழிந்து மூலவர் சிவலிங்கம் மட்டும் செண்பக மரங்கள் அடங்கிய புதரில் மறைந்து இருந்தது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் பசு ஒன்று தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சுரப்பதைக் கண்ணுற்று மக்கள் சுயம்பு லிங்கமாக இருந்த லிங்கத்தின் மீது வெட்டுகாயம் இருந்ததால் “திருவேட்டீஸ்வரர்” என அழைத்து திருக் கோயில் எழுப்பினர். மொகலாய பேரரசர் காலத்தில் மான்யங்கள் இத் திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியர் ஆட்சிக்காலத்தில் 1.11.1734ல் இக்கோயில் நிலங்களுக்கு வரி செலுத்து வதிலிருந்து விலக்கு அளித்து கவுல் ஏற்பட்டது. எனவே 16,17ம் நூற்றாண்டில் இக்கோயில் இருந்துள்ளது. நவாப் காலத்தில் மான்யங்கள் தரப்பட்டு இத்தலம் விருத்தி அடைந்ததாக வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன. இன்றும் அர்த்தசாம பூஜைக்கு பால், புஷ்பம் நவாப் பரம்பரையினர் மூலமாக இத்தலத்து இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

தலச் சிறப்பு

வியாச முனிவர் செய்த பதினெண் புராணங்களையும் கற்றுணர்ந்த சூத முனிவரே திருவேட்டீஸ்வரன் தலப் பெருமையைக் கூறுகிறார். இவ்வாறு முனிவர் கேட்டது `அபேதசைவத்தின் திறம்’ என்பர். இத்தலம் காசி, காளத்தி போல் மிகச்சிறந்ததென்றும், எத்தலத்துக்கும் இது ஒக்கும் என்றும் இறைவனே அசரீரி வாக்காக அருள அந்த அசரீரி திருவேட்டீஸ்வரர் திருக்கோயிலில் சூசகமாக இருந்து பதினேழு நித்திய லிங்கங்களில் ஒன்றாக திகழ்கிறது என்று தலபுராணம் கூறுகிறது. “அறந்தழை யுந்திருவேட்டித்தல மகிமை யறிந்தவுடன். . . . . திசையான சுயம்புலிங்கத் திருவேட்டீஸ்வரனே” என்ற பாடலால் நாம் இத்தல மூர்த்தியின் மகிமையை நாம் அறிகிறோம்.

`இத்தலம் காசி, காளத்தி போல் சிறந்ததென்றும் எத்தலத்துக்கும் இது ஒக்கும்’ என்றும் இறைவனே அசரீரி வாக்காக அருள அந்த அசரீரி வாக்கியமே நிரந்தரமாக திருவேட்டீசுவரர் ஆலயத்தில் சூட்சுமமாக இருந்து, பதினேழு நித்யலிங்கங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்றும்

`திருவேட்டீசுவரனை அடியார்கள் பூசித்தால் போகமும், ஞானமும் பெற்று முக்தியடையலாம் என்றும், பக்குவ காலத்தில் திருவேட்டீச்சுரனே குருவாய் வந்து ஆட்கொள்வான்’ என்றும் தலபுராணம் கூறுகிறது.

மகாலக்ஷ்மி இங்கு தவம் செய்து வேங்கடகிருஷ்ணனை மணம் பெற்ற காரணத்தினால் `திருவேட்டு அகம்’ எனவும் இத்தலம் பெயர் பெற்றுள்ளது. இதற்குச் சான்று பிருந்தாரண்ய க்ஷேத்திரமாக, திருவல்லிக்கேணி என்ற பெயரில் வைணவப் பெரியோர்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயில் இத்தலத்துக்கு அருகேயே உள்ளது. திருவல்லிக்கேணி `விஷ்ணுத்தலம்’ என்றும், திருவேட்டீச்சுரம் `சிவத்தலம்’ என்றும் அருகில் நாகப்பய்யர் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் திருக்கோயில் பிரம்மாவின் தலம் என்றும் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் குறிப் பிட்டுள்ளது இத்தலத்தின் மகிமையை ஓங்கி பறைசாற்றும்.

திருவேட்டீசுவரர் புராணம்

இப் புராணம் திருவேட்டீச்சுரத்தை பற்றிய அல்லது திருவேட்டீசுவரரைப் பற்றிய புராணம் என்று விரியும். திரு+வேட்ட(ல்) + புராணம். இலக்குமியினால் பூசிக்கப்பட்ட சிவபெருமானின் தொன்மை வரலாறு என்று பொருள் படும். இந்த நாமத்தின் முதல் தொடரில் `திரு’ என்ற சொல் மங்கலச்சொல்லாகவும், இலக்குமியின் பெயரைக் குறிப்பதாயும் உள்ள சிறப்பு பொருளையும் கவனிக்கத்தக்கது. இலிங்கம் பார்த்தனின் அம்பால் பிளவு பட்டதால் அல்லது செண்பகப் புதரில் தெரிந்து எடுக்கும் போது பிளவு பட்டதால் (வெட்டுப்பட்டதால்) `திருவெட்டீச்சுரம்’ என்றும் கூறுவர்.

அருள்மிகு திருவேட்டீசுவரர்

இங்கு சுயம்பு மூர்த்தியாய், லிங்க வடிவில் பெருமான் எழுந்தருளியுள்ளார். அடிப்பாறையின் மேல் வெளிப் பட்டதாக செய்திகள் கூறுகின்றன. மூலஸ்தானத்தில் லிங்க மூர்த்தியின் முடியில் ஒரு பிளவு காணப்படுகிறது.

இங்கு அர்ச்சுனன் பாசுபதாஸ்த்ரம் பெற தவம் செய்த போது சிவபெருமான் வேடுவனாக வந்ததை பார்த்தன் உணராமல் வில்லால் அடித்ததால் இத்தழும்பு ஏற்பட்டது என்று பெரியோர்கள் கூறுவர்.

எனவே இந்த லிங்க மூர்த்தியை `பார்த்த பிரகர லிங்கம்’ என்பர். இந்தப் பெயர் சிவபெருமானின் விசேஷ பெயர்களுள் ஒன்றாகும். இந்த பெருமையை தமிழ் சங்க இலக்கியங்களுக்கு புத்துயிர் தந்த மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் எடுத்து விளக்கியுள்ளார். மற்ற தலங்களில் தலப்பெயரே சுவாமிக்கு வழங்கப் பட்டாலும், வேறு திருநாமம் இருக்கும்.

ஆனால் இங்கு “திருவேட்டீஸ்வரர்” என்ற திருநாமமின்றி வேறு இல்லை. இம்மூர்த்திக்கு அமைந்த `திருவேட்டீச்சுரர்’ என்ற நாமம் வேதங்களே இட்ட சந்தம் மிகு நாமம் என்றும் போற்றப் படுகிறது.

விஸ்வேஸ்வரம் நித்யமநந்த ரூபம் பினாகபாணிம் பவதுக்கபோதம்

பாலேந்துசூடம் திருவேட்டிநாதம் ஸுசம்பகேசம் ஹ்ருதிபாவயாமி

என்ற வடமொழி ச்லோகத்தில் சமஸ்கிருத பேராசிரியர் திரு ஞானசம்பந்தம் திருவேட்டீசுவரரை எண்ணி மகிழ்கிறார்.

மேட மேமுதல் மீனமுற் றிறுதிஇ ராசித்

தோடம் யாவையும் போக்கிஇன் பாக்கிடும் துணைவன்

வேட வேடத்தில் விஜயற்குப் படைதரு விஜயன்

சேடன் காப்புசென் னைத்திரு வேட்டீஈச் சரமே.

என்று நற்தவத்தோர் திருவேட்டீசுவரனை புகழ்ந்து ஏத்துகின்றனர்.

அங்கனா மொளிர்ந்த லிங்கம் அருகினில் ஓடைகண்டு

திங்களி னொளிபோல் விளங்கிச் சேணுயர் தேவரெல்லாம்

தங்கள் நாயகன் என்று எண்ணித் தரணியில் சிவபெருமான்

இங்குவந் தடைந்தான் என்றே எண்ணிலாப் பூசை செய்வார்

`கயிலை, வெள்ளியங்கிரி, கேதாரம் போன்று செண்பக ஓடையின் அருகில் வீற்றிருந்த மூர்த்தியை ரிஷிகள் தரிசித்து எண்ணிலா பூஜைகள் செய்ததாக கூறப்படுகிறது. கைலாயத்தில் வீற்றிருக்கும் முழுமுதற் கடவுளே திருவேட்டீசுவரராக இங்கு கோயில் கொண்டதாக ஸ்தல புராணம் நமக்குச்சொல்கிறது.

செண்பகாம்பிகை சன்னதி

தொண்டை நாட்டில் செழிப்பாக ஓடிய வேகவதி ஆறு வந்து கலந்த ஓடையே செண்பகஓடையாகும். அந்த செண்பக ஓடையில் சுயம்புவாக கிடைத்த இறைவிக்கு செண்பகாம்பிகை என்ற பெயரிடப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.. செண்பக ஓடையே தற்போது செண்பகத்தடாகம் என்ற திருக்குளமாக திருக்கோவிலில் உள்ளது.

திருவேட்டி என்றுதிரு நாவுரசர் செய்பாத் – திருவேட்டில் வைப்புத் திருவூர் மருவேட்டிற்காணும்வேட் டீசுவரன் பேட்டைக்கண் கற்பகப்பூப் – பூணுசண்ப கப்பூவே! போற்று!

என்று அருட்கவி சாதுராம் சுவாமிகளால் போற்றி பாடப்பட்ட இறைவி சண்பகாம்பிகை.

வேட்டீ சுரன்பேட்டை மெய்த்திரு வேட்டீசர்மனை – யாட்டீ!

அல் லிக்கேணிக் கார்ந்ததிரு வாட்டீ!

பேர்சால்பார்த்த ஸாரதிக்குத் தங்கையாம் சண்பகம்!

நின் – கால்பார்த்தற் கெற்கின்று காட்டு.

என்று அன்னை சண்பகத்தாயின் பாதம் காண்போர் உளம் உருகுவர்.

அம்பாளின் தனிக்கொடி மரம் அருகிலேயே ஸ்தல விருட்சமான செண்பக மரமும் உள்ளது. ஆடி மாதம் பத்து நாட்கள் சிறப்பு உற்சவமும், நவராத்திரி ஒன்பது நாட் களிலும், நவ விதமான விசேஷ அலங்காரத்துடன் கொலு மண்டபத்தில் அன்னை அருட்காட்சி தருகிறாள்.

வழிபாட்டுப் பயன்

திருவேட்டீச்சுரனை வலம்வந்து பணிந்தால் அவன் காலந் தாழ்த்தாது) அருள்தந்து ஆள்வான் என்றும் திருவேட்டீ சுவரத்தில் தவம் புரிதல் பவக்கடலைத் தாண்ட உதவும் தெப்பம் போன்றது என்றும் திருவேட்டீசுவரரை வழிபட ஞானமுண்டாகும்; நித்ய வாழ்வு வந்து எய்தும்; மாசற்ற மனத்தூய்மையுடன், மூன்று வேளையும் திருக்கோவிலை வலம் வருவது மிகப் பெரிய தவமாகும்;

என்ன மாபாதகம் செய்திடினும் அவை திருவேட்டீசுவரரை வலம் வரப் பஞ்சாய்ப் பறந்து போகும் என்கிறது ஸ்தல புராணம். இத்தலத்தில் எல்லா சீலர்களுக்கும் உய்வுண்டு. சரியை, கிரியை, யோகம் முதலிய மார்க்கங்களிலே நின்று வழிபடுவோர் சாலோக, சாரூப, சாமீப, பத முத்திகள் அடைவர்.

அதன் பயனாக சாயுஜ்யம் எனப்படும் அத்துவித நிலையை அடைவர் என்றும் தலமகிமையைக் கூறுகிறது தலபுராணம்.

திருக்கோவில் அமைப்பு

திருக்கோவில் நெடிது உயர்ந்த ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம், சிவதத்துவங்களை உணர்த்தும் அழகிய சுதை சிற்பங்களுடன் காட்சி அளிக்கிறது. `கோபுர தரிசனம் கோடி பாபவிமோசனம்’ என்ற மூதுரைக்கேற்ப ராஜ கோபுரத்தை நிமிர்ந்து வணங்கி நாம் உள் சொல்லலாம்.

உள்ளே முதலில் நம் கண்ணில் தெரிவது கொடிமரம்.

வல்லப விநாயகர் சன்னதி

கொடி மரத்தின் இடது புறத்தில் வேழமுகத்து விநாயகர், வல்லபையுடன் தனி சன்னதியில் உள்ளார். இவருக்கு சங்கடஹரசதுர்த்தி, விநாயக சதுர்த்தி காலங்களில் அபிஷேக அர்ச்சனைகள் செய்து அடியார்கள் வழிபடுகிறார்கள்.

அதிகார நந்தி

வல்லப விநாயகர் இடது புறத்தில் அதிகார நந்தி தனி சன்னதியிலும், அவருக்கு இருபுறமும் காவலாக நாகராஜாக்களும் உள்ளனர்.

காசி விஸ்வநாதர் சன்னதி

அதிகார நந்தி சன்னதியில் இருந்து நேராக நோக்கினால் திருக்கோவிலின் தென்மேற்கு மூலையில் அருள்மிகு காசி விஸ்வநாதர், கோஷ்டத்தில் விசாலாட்சியுடன் காட்சி அளிக்கிறார். பிரதோஷம், மகாசிவராத்திரி போன்ற புண்ய காலங்களில் இவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

வள்ளலார் சன்னதி

திருக்கோவிலின் வெளிச்சுற்றில் வடமேற்கு மூலையில் ராமலிங்க சுவாமி சன்னிதி உள்ளது. தைப்பூச நாட்களில் அவருக்கு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் திருவீதி உலா நடைபெறுகிறது.

ஆறுமுகர் சன்னதி

திருக்கோவிலின் வடமேற்கு மூலையில் ஷண்முகக் கடவுள், வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது ஆரோகணித்து தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறார். மாத கிருத்திகை மற்றும் தை, ஆடி கிருத்திகைகளில் பால்காவடி யுடன் இவருக்கு சிறப்பு அபிஷேகமும், திருவீதி உலாவும் நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தன்று விபூதி காப்பும், கந்த சஷ்டி நாட்களில் லட்சார்ச்சனையும், சூரசம்ஹார திருவிழாவும் நடைபெறுகிறது.

ஸ்ரீஆறுமுகருக்கு `சத்ரு சம்ஹார பூஜை’ பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்க நடைபெறுகின்றது. `சத்ரு சம்ஹார பூஜை’ என்பது நியாயமாக தனக்கு கிடைக்க வேண்டிய வெற்றிக்காகவும் பொதுவான எதிரிகள் இல்லாமல் இருக்கவும், ஆறுமுகருக்கு மட்டுமே செய்யப்படும் விசேஷ பூஜையாகும்.

(தனித்து ஒருமுகம் உள்ள முருகருக்கு இப்பூஜை எங்கும் செய்யப்படமாட்டாது.)

நவக்கிரஹ சன்னதி

திருக்கோவில் வெளிச்சுற்றில் வலது புறம் நவக்கிரக நாயகர்களின் சன்னதியும், ஈசான்யமூலையில் அருள்மிகு கால பைரவர் சன்னிதியும் அமைந்து உள்ளது. அஷ்டமி திதியில் இவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறுகிறது.

உட்பிரகார அமைப்பு

மகாமண்டபத்தில் உள்ள நந்தியெம்பெருமானை வணங்கி உள்ளே நுழைந்தால் `தொண்டர் தம்பெருமை சொலல் என்பதற்கு ஏற்ப’ சிவனருட் செல்வர்களான 63 நாயன்மார்களும் கைகூப்பியபடி

மூலவரை பார்க்கும் சிலா ரூபங்களைத் தரிசிக்கலாம். நுழைவாயிலின் உட்புற இருபுறமும், சூரியனும், சந்திரனும் அருள்பாலிக்கிறார்கள்.

சோமாஸ்கந்தர் சன்னதி

இக்கோயிலில் மூலவருக்கும், உற்சவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்படியாக, இருவரும் தனித்தனியாக பஞ்சகோஷ்டத்தில் அமர்ந்து அருள் பாலிக்கின்றார்கள். இது வேறெங்குமே காண முடியாத சிறப்பு அம்சமாக உள்ளது. சோமாஸ்கந்தர் மண்டப கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, சிவதுர்க்கை முதலானோர் அருள்பாலிக்கின்றனர்.

கணபதி சன்னதி

சோமாஸ்கந்தரின் கோஷ்டத்தில் தெற்கு முகம் நோக்கி கம்பீரமாக இந்த கணபதி சன்னதி உள்ளது.

தட்சிணாமூர்த்தி சன்னதி

ஞான உபதேசத்தை சின்முத்திரையைக் காட்டி நமக்குத் தரும் தட்சிணாமூர்த்தி காஞ்சி ஸ்ரீமஹாபெரியவாள் அவர்களால் `யோக தட்சிணாமூர்த்தி’ என்று இனம் காட்டப்பட்டு, சர்வசக்தியுடன் விளங்குகிறார். இவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், குரு பெயர்ச்சி காலங்களில் விசேஷ ஹோமங்கள், அலங்காரம் மற்றும் லட்சார்ச்சனையும் கண்டு அருளுகிறார்.

அருணாசலேச்வரர் சன்னதி

சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக போற்றப்படும் ஸ்ரீஅருணாசலேச்வரரின் அழகிய வடிவினை சுற்றுப் பிரகாரத்தில் முதலில் நாம் காணலாம்.

கன்னிமூலை கணபதி முதலான மற்றைய சன்னதிகள்

அருள்மிகு தக்ஷிணாமூர்த்தியைக் கடந்தால் நாம் திருக்கோவிலின் கன்னிமூலையில் வீற்றிருக்கும் கஜானனை தரிசிக்கலாம். அபூர்வமாக கன்னிமூலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

கன்னிமூலை கணபதிக்கு அடுத்தபடியாக ஸ்ரீவீரபத்திரர் அழகுற காட்சியளிக்கிறார். அடியார்கள் தாங்கள் துவங்கும் செயல்களில் வெற்றி கிடைக்க அமாவாசைத் திங்களில் வெற்றிலை மாலை சூடி வீரபத்திரரை வழிபடுகிறார்கள்.

அடுத்து நாம் காண்பது முருகப் பெருமானின் பலவித அபூர்வ வடிவங்களில் ஒன்றான ஸ்ரீபாலசுப்ரமணியரையும், அதற்கு அடுத்து தொண்டர்சீர் பரவுவார் புராணத்தைப் பாடிய தெய்வச்சேக்கிழாரை நாம் சிலா ரூபத்தில் இங்கு தரிசிக்கலாம். அடுத்து `மேன்மை கொள் சைவநீதி விளங்குகஉலகு எலாம்’ என்ற திருமறை வாக்கிக்கிற்கு ஏற்ப சைவ சமயத்தை மேம்படுத்திய நால்வரான அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் சிலா ரூபங்களை காணலாம். பின்னர் சைவசமயக் குரவர்களில் நால்வரில் ஒருவரான ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள், சங்கிலியார், பரவையாருடன் அழகிய உருவில் காட்சி தருகிறார். இச் சுற்றுவட்டாரத்தில் இத்திருக்கோயிலில் மட்டுமே இவர்கள் எழுந்தருளி உள்ளார்கள் என்பது கூடுதல் செய்தி. அதன்பின் நாம் சைவ ஆகம சாஸ்திரத்தை வகுத்துக் கொடுத்த சந்தானக் குரவர்கள் நால்வரின் சிலாரூபங்களை மிக மிக அபூர்வமாக இத்தலத்தில் மட்டுமே தரிசிக்கலாம். சந்தானக் குரவர்களை தரிசித்தபின் நாம் வள்ளி தெய்வானை சமேதராய் முத்துக்குமார சுவாமி அருள்பாலிக்கு அழகை கண்டு வணங்கலாம். அடுத்து நாம் செல்வத்தை வாரி வழங்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி யையும், ஞானத்தை அள்ளி வழங்கும் ஸ்ரீமஹா ஸரஸ்வதி சன்னதிகளை. மாதர்கள் இச் சன்னதியில் செவ்வாய், வெள்ளி விளக்கேற்றி அன்னையர் அருள் பெறுவது கண்கூடு.

பாம்பன் ஸ்வாமிகள் வழிபட்ட சிவமூர்த்தங்கள்

முக்கண்ணனின் நெற்றிக் கண்ணில் உதித்த முருக வேளின் திருக்காட்சியை கண்ணால் காணப்பெற்ற ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், தம் வாழ்நாளில் பூசித்து வழிபட்ட பிரம்மேஸ்வரர், விசுவநாதர் லிங்க மூர்த்தங்களை இத்திருக்கோயிலுக்கு அளித்து விட்டதால், அந்த மூர்த்தங் கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த அபூர்வ லிங்கங்களை அடியார்கள் அனைவரும் தரிசித்து மகிழலாம்.

அதே போல் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் தாமே பூசித்த, திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரின் விக்கிரகத்தை இத் திருக்கோயிலில் காணலாம். திருவான்மி யூரில் உள்ள ஸ்ரீமத்பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் அடியார்கள் குழு, ஆனி மாதம் மூல நட்சத்திரத்தன்று இத்திருக்கோயில் ஆறுமுகர் சன்னதிக்கு பெரும் திரளாக வந்து, ஆறுமுகருக்கும், அருணகிரிநாதருக்கும், ஸ்ரீமத் சுவாமிகளின் பஞ்சாமிர்த வர்ணம் மற்றும் ஏராளமான திருப்புகழ்கள் பாடி அபிஷேகம், பூஜைகள் செய்து சிறப்பாக வழிபடுகிறார்கள்.

இந்த மூர்த்தங்களுக்கு அருகில் தெற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் நீலகண்ட சிவாச்சாரியாரின் சிலா ரூபத்தை காணலாம்.

மஹாவிஷ்ணு சன்னதி

சிவாலயங்களில் மூலவர் பின்புறம் பொதுவாக லிங்கோத்பவரே காணப்படுவார். ஆனால் சில பழமையான சிவாலயங்களில் உள்ளது போன்றே இத் தலத்தில் மூலவருக்குப் பின்புறம் மஹாவிஷ்ணு சன்னதி உள்ளது. இவருக்கு பக்கத்தில் சக்கரத்தாழ்வார் சன்னதியும் உள்ளது.

பிரம்மா சன்னதி

மூலஸ்தானத்தின் வடக்கு பாகத்தில் உள்ள கோஷ்டத்தில் பிரம்மாவை அடுத்து தரிசிக்கலாம்.

சண்டிகேஸ்வரர் சன்னதி

பெருமானாலேயே `சண்டீச பதம்’ அருளப்பெற்ற ஸ்ரீசண்டிகேஸ்வரர், இறைவனின் அபிஷேக நீர்ப்பாதை விழும் இடமான கோமுகத்தின் அருகே, சிறிய விமானத்துடன் யோக நிலையில் எழுந்தருளியுள்ளார்.

63 நாயன்மார்கள் விக்கிரகங்கள்

உட்பிரகாரத்தில் ஸ்ரீசண்டிகேசப் பெருமானுக்கு எதிரில் எம்பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட 63 நாயன்மார்களின் விக்கிரக திருமேனிகளும் அழகுற வீற்றிருப்பதை கண்டு ஆனந்தம் கொள்ளலாம். சித்திரைப் பெருவிழாவின் போது இவர்களுக்கென்று தனியாக உற்சவம் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் 63 நாயன்மார்களுக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்விக்கப்பெற்று, இறைவனும் இறைவியும் புண்ணிய கோடி விமானத்தில் எழுந்தருள, நாயன்மார்கள் அனைவரும் திருவீதி புறப்பாடு கண்டருளுகின்றனர். அவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

துர்க்கை சன்னதி

ராகு கால நாயகியாம், வினை தீர்க்கும் துர்க்கை இங்கு விஷ்ணு துர்க்கையாக அழகுற சர்வாலங்காரங்களுடன், வருவோரின் துயர் துடைக்க அருட்புன்னகையுடனும், அபய கரத்துடன் காட்சி தருகிறாள். இராகுகாலங்களிலும் அதிலும் சிறப்பாக செவ்வாய்கிழமை இராகுகாலத்தில், `செவ்வாய் கிழமை ராகுகால மகளிர் மன்றத்தினர்’ திரளாக வந்து திருவிளக்கு பூஜையுடன், ஏராளமான அம்மன் பாடல்கள் பாடி துர்க்கை அம்மனை வழிபடுகிறார்கள்.

கால பைரவர் சன்னதி

கோஷ்டத்தில் உள்ள பைரவருக்கு தினமும் அபிஷேகமும், அஷ்டமி தினங்களில் அர்த்தசாமத்திற்கு முன்பு விசேஷ அபிஷேகம், அர்ச்சனைகளும், பைரவாஷ்டமி அன்று சிறப்பு ஹோமங்களும் நடத்தப்பெறுகிறது. எதிரிகள் தொல்லை, சத்ரு உபாதை, வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி, தீராத பிணி நீங்குதலுக்காக பக்தர்கள் இவரை பணிந்து கைமேல் பலன் பெறுகிறார்கள்.

நடராஜர் சன்னதி

கூத்தப்பிரானாம் சித்சபேசன், சிவகாம சுந்தரியுடனும் தில்லையில் உள்ள மூர்த்தத்தைப் போன்றே இத்தலத்தில் காட்சி தருகிறார். இவரின் திருப்பாதத்திற்கு கீழே காரைக்கால் அம்மையாரும், மணிவாசகப் பெருந்தகையும் விக்கிர ரூபமாக காட்சி தருகிறார்கள்.

ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய கீர்த்தனை

ராகம் : கமகக்ரியா தாளம் : ரூபகம்

பல்லவி

திருவட்டீஸ்வரம் நமாமி சந்ததம் சிந்தயாமி

சரணம்

மாரகோடி ஸ்வரூபினம் மாரகடமணி பூஷணம்

சம்பகவல்லி ரமணம் சம்பக புஷ்பாபரணம்

சம்பத்ப்ரதான நிபுணம் சுகுருகுஹாந்த கரணம்

பொருள் : ஸ்ரீதிருவேட்டீஸ்வரரை நான் வணங்குகிறேன். அவரையே எப்பொழுதும் நினைக்கின்றேன். ஈசனின் கோடிக் கணக்கான உருவங்களில் அவர் ஒருவராய் திகழ்கிறார். அவர் அணிந்துள்ள மாலை உயரிய ரத்தினங்கள் பதிக்கப் பெற்றாய் உள்ளது. சம்பகவல்லியின் மனம் கவர்ந்த வராயும், தங்கத்தினை ஒத்த சண்பக மாலையை அணிந்த வராயும், வேண்டும் வரங்களை கொடுப்பவராயும், `குருகுஹ’னான என்னுடைய மனதில் நிறைந்தவராகவும் உள்ளார்.

திருக்கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை ;

மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

பழமையும், தெய்வீகமும், அருட்சக்தியும் வாய்ந்த இத்திருக்கோயிலை தரிசித்து இறைவன் அருளை பெற வாரீர்! வாரீர்!

 

திருக்கோயிலில் வருடந்தோறும் நடக்கும் திருவிழாக்கள்

சித்திரை பிரம்மோற்சவப் பெருவிழா

சித்திரை மாதம் 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில், 3ம் நாள் நடக்கும் அதிகார நந்தியும், 5ம்நாள் ரிஷப வாகன சேவையும், 8ம்நாள் புண்ணியகோடி விமானம் மற்றும் 63 நாயன்மார் உற்சவமும், 10 நாள் நடக்கும் திருக்கல்யாணமும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

வைகாசி பெருவிழா

முருகப் பெருமான் அவதாரம் செய்த விசாக நட்சத்திரத் தன்று ஸ்ரீஆறுமுக சுவாமிக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் செய்துறு திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது.

ஆடிப்பூரத் திருவிழா

திருவேட்டீஸ்வரருக்கு பவித்ர உற்சவமும், தனிக்கொடி மரம் கொண்டுள்ள சண்பகாம்பிகைக்கு 10 நாட்கள் உற்சவமும் ஆடிப்பூரம் அன்று லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.

நிறைகனி காட்சி

புரட்டாசி பௌர்ணமியில் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மளிகைப் பொருட்களுடனும், திருவேட்டீஸ்வரர் சன்னதி முன் கட்டப்பட்டு `இந்திர பூஜை’ நடைபெறுகிறது.

அன்னாபிஷேகம்

ஐப்பசி பௌர்ணமியில் மூலவருக்கும், காசி விச்வநாதருக்கும் வெகு விமரிசையாக அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

கார்த்திகை சங்காபிஷேக விழா

கார்த்திகை பௌர்ணமி அன்று திருக்கோயிலில் விசேஷ தீபங்கள் ஏற்றப்பட்டு திருக்கார்த்திகை தீபவிழா கொண்டாடப்படுகிறது.அதே போல் கார்த்திகை ஐந்து சோம வாரங்களிலும் விசேஷ ஹோமங்களுடன் 108 சங்காபிஷேகம் திருவேட்டீஸ்வரருக்கு செய்யப்படுகிறது.

தனுர்மாத பூஜை

மாதங்களில் புனிதமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலை தனுர்மாத பூஜை நடைபெறுகிறது.

நடராஜர் அபிஷேகங்கள் மற்றும் ஆருத்ரா தரிசனம்

ஆடல் வல்லான் எனப் போற்றப்படும் கூத்தபிரானுக்கு வருடந்தோறும் 6 அபிஷேகங்கள் மிக சிறப்பாக நடைபெறுகின்றது. அதில் ஒன்றாக, மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜப் பெருமானுக்கு இரவு மஹா அபிஷேகமும், விடியற்காலை நடராஜப் பெருமானின் ஆனந்தத்தாண்டவ தரிசனமான `ஆருத்ரா தரிசனமும்’நடைபெறுகிறது.

மாசி மக விழா

மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தன்று திருவேட்டீஸ்வரர் ரிஷப வாகனத்தில் பக்தர்கள் புடை சூழ கடற்கரை செல்வார். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தபட்டு `கடல் நீராட்டு விழா’ நடைபெறும்.

மாசி சிவராத்திரிப் பெருவிழா

மஹா சிவராத்திரி புண்ணியத் தினத்தன்று திருவேட்டீஸ் வரருக்கு மிகப் பெரிய விழா நடத்தப்பெறுகிறது. இரவு நான்கு ஜாமங்களிலும், விசேஷ அபிஷேகங்கள், திவ்ய அலங்காரங்கள் செய்விக்கப்படுகின்றன. சிவராத்திரி அன்று காலை சுவாமிக்கு லட்சார்ச்சனையும் நடைபெறுகின்றது.

 

பங்குனி – சூரிய பூஜை

பங்குனி மாதத்தின் முதல் வாரத்தில் மூலவரின் திருமுடி தொட்டு திருப்பாதம் வரை சூரியனின் ஒளிக்கற்றைகள் விழுவதை சூரிய பூஜை என்கின்றனர் ஆன்றோர்கள்..

நந்தவனம்

திருக்கோவிலின் பின்புறத்தில் பரந்து விரிந்த அழகிய நந்தவனம் உள்ளது. இங்கு இறைவனின் பூஜைக்கு என பலவித அழகிய மலர்ச் செடிகளும், வில்வ மரங்களும், மாமரங்களும், தேக்கு மரங்களும் உள்ளன. பெண்கள் நாகராஜாக்களின் வழிபாடு செய்வதற்காக அரச, வேப்ப மரத்தடியில் எண்ணற்ற நாகலிங்கங்கள் உள்ளன. ஆடி, கார்த்திகை, தை மாதங்களில் பெண்கள் திரளாக நந்தவனத்திற்கு வந்து நாகராஜாக்களுக்கு பால் அபிஷேகம் செய்து, பூசைகள் செய்து வழிபடுகின்றனர்.

திருக்குளம்

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூன்றினாலும் பெருமைப் படத்தக்க இத்திருக்கோயிலின் உள்ளேயே பிரம்மாண்டமான திருக்குளம் உள்ளது ஓர் தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு வருடமும் இத்திருக்கோயில் அடியார் குழுவினரால் தை மாதம் அன்று 3 நாட்கள் தெப்போற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

திருவேட்டீஸ்வரர்- செண்பகாம்பிகை முதல் நாளும், செண்பகாம்பிகை இரண்டாவது நாளும், மூன்றாவது நாள் முத்துகுமார சுவாமி, வள்ளி தெய்வானையுடனும், தெப்பத் திருவிழா கண்டருளுகிறார். இதனை பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கண்டு மகிழ்கிறார்கள்